×

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம்

தூத்துக்குடி: முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி டிஎஸ்பி சுரேசை நியமித்து தென்மண்டல ஐ.ஜி. ஆஸ்ராகர்க் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு விஏஓவாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த 25ம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமசுப்பிரமணியனையும், மாரிமுத்துவையும் முன் கூட்டியே கைது செய்திருந்தால், இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்று வருவாய் துறையினர் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது. மணல் கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோரது செல்போன்களில் பேசியவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரித்து வந்தார். அவரை மாற்றிவிட்டு தூத்துக்குடி டிஎஸ்பி சுரேஷ் என்பவரை விசாரணை அதிகாரியாக நியமித்து தென் மண்டல ஐ.ஜி. ஆஸ்ராகர்க் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, தூத்துக்குடி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Thirapnadu ,Thoothukudi ,VAO ,DSP ,Suresa ,Lurdu ,Francis ,South Mandala IAO ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...